Asianet News TamilAsianet News Tamil

சூப்பர் பாஸ்டாக மாறுது கோவை – நாகர்கோவில் இரயில்; சொதப்பல் திட்டம் என்று பணிகள் காட்டம்…

kovai - Nagercoil Rail changed as Super fast
kovai - Nagercoil Rail changed as Super fast
Author
First Published Jun 8, 2017, 7:47 AM IST


கோயம்புத்தூர்

வருகிற 28–ஆம் தேதி முதல் கோவை – நாகர்கோவில் இரயில் சூப்பர் பாஸ்டாக மாறுகிறது. ஆனால், வேகமாக போகும் இரயிலின் நேரத்தை குறைத்ததால் இரயில்வே துறைக்கு வருமானம் வராது என்றும் நேரத்தை மாற்றியது சொதப்பல் என்றும் பயணிகள் காட்டத்துடன் தெரிவித்தனர்.

தென் மாவட்டங்களை சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் கோவையில் வசித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக கோவை – நாகர்கோவில் விரைவு இரயில் விடப்படுகிறது.

அந்த இரயில் கோவையில் இருந்து தினமும் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு காலை 6.30 மணியளவில் நாகர்கோவில் சென்றடைகிறது. இதேபோல் நாகர்கோவிலில் இருந்து மறு மார்க்கத்தில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு கோவையை காலை 7 மணிக்கு வந்தடைகிறது.

இந்த நிலையில் நாகர்கோவில் விரைவு அதிவிரைவு இரயிலாக வருகிற 28–ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது. இதன் காரணமாக அந்த இரயிலில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல 2–ஆம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டியில் தற்போது கட்டணம் ரூ.310 வசூலிக்கப்படுகிறது. இனி 30 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.340 வசூலிக்கப்படும்.

இதேபோல் மூன்று அடுக்கு குளிர்சாதனப் பெட்டிக்கான கட்டணம் ரூ.840 இனி ரூ.45 உயர்த்தப்பட்டு ரூ.885 ஆக நிர்ணயிக்கப்படும்.

முன்பதிவு இல்லாதப் பெட்டிக்கான கட்டணம் ரூ.160–ல் இருந்து ரூ.175 ஆக உயர்த்தப்படுகிறது.

இந்த கட்டண உயர்வு வருகிற 28–ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதனிடையில் நாகர்கோவில் விரைவு, அதிவிரைவு இரயிலாக மாற்றப்பட்டபோதிலும் அது கோவையில் இருந்து புறப்படும் நேரம் இரவு 8.30 மணிக்கு பதிலாக 7.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து கோவை இரயில்வே போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.நாகராஜ் கூறியது:

“கோவையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் ஒரு சில இரயில்களை போன்று கோவை –நாகர்கோவில் இரயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு வாரத்துக்கு முன்பு முன்பதிவு செய்தாலும் அதில் இடம் கிடைக்காது.

கோவையிலிருந்து சென்னை செல்லும் நீலகிரி விரைவு, சேரன் விரைவு ஆகிய இரயில்களை போன்று கோவை – நாகர்கோவில் இரயிலிலும் 100 சதவீதம் பயணிகளின் கூட்டம் இருக்கும்.

வருமானம் அதிகம் தரும் அந்த இரயிலின் நேரத்தை மாற்றியிருப்பது கோவையை தென்னக இரயில்வே வேண்டுமென்றே புறக்கணிக்கிறது என்று தெரிகிறது.

பயணிகளுக்கு வசதியை செய்து தருவதற்கு பதிலாக பயணிகளை இரயிலில் செல்ல விடாமல் செய்வதில்தான் இரயில்வே நிர்வாகம் தீவிரமாக உள்ளது.

வருகிற 28–ஆம் தேதிக்கு பிறகு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டில் தற்போது கோவையிலிருந்து இரவு 7.30 மணிக்கு இரயில் புறப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விரைவு இரயிலாக இருந்தது தற்போது அதிவிரைவு இரயிலாக மாற்றப்பட்டுள்ளதால் அதன் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேகம் அதிகரிக்கும்போது அந்த இரயில் போய் சேரும் நேரம் குறையும். அப்படியென்றால் அந்த இரயில் கோவையில் இருந்து இரவு 8.30 மணிக்கு பதில் அதற்கு பிறகும் புறப்படலாம். ஆனால், ரெயில்வே நிர்வாகம் முரண்பாடாக கோவையில் இருந்து புறப்படும் நேரத்தை இரவு 8.30 மணிக்கு பதிலாக 7.30 மணிக்கு மாற்றியிருப்பது பயணிகளை சிரமம் அடைய செய்யும்.

மேலும், அந்த இரயிலில் பயணம் செய்யும் 80 சதவீத பயணிகள் நெல்லையிலேயே இறங்கி விடுவார்கள். புதிய நேரப்படி அந்த இரயில் நெல்லைக்கு அதிகாலை 3.30 மணியளவில் சென்றடையும். அந்த நேரத்தில் இரயில் நிலையத்தில் இறங்கி கிராமங்களுக்கு செல்பவர்களுக்கு பேருந்துகள் கிடைக்காது. இதனால் குடும்பத்தோடு செல்பவர்கள் நெல்லை இரயில் நிலையத்தில் மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஆனால், மறுமுனையில் நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு புறப்படும் நேரம் இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது நாகர்கோவிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

எனவே, கோவையிலிருந்து புறப்படும் நேரத்தை முன்பு போல இரவு 8.30 மணிக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி இரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை செய்கிறோம்” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து இந்த இரயிலை அடிக்கடிப் பயன்படுத்தும் பயணிகள், “கோவையில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், வணிகம் செய்பவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு ஊருக்குப் புறப்படுவதற்கு இரவு 8.30 மணி என்பது வசதியாக இருந்தது. இதனால் அந்த இரயிலை கோவை மக்கள் அதிகம் விரும்பினார்கள்.

ஆனால், தற்போது அது புறப்படும் நேரம் இரவு 7.30 மணியாக மாற்றப்பட்டுள்ளதால் 90 சதவீத பயணிகள் அந்த இரயிலில் செல்ல முடியாமல் அந்த இரயிலை பயணிகள் கைவிட வேண்டியிருக்கும்.

இரயிலின் நேரத்தை மாற்றுவதால் இரயில்வேக்கு லாபம் எதுவும் கிடையாது.

பொதுவாக ஏற்கனவே உள்ள நேரத்தை விட 5 அல்லது 10 நிமிடங்கள் தான் மாற்றப்படும். ஆனால், ஒரு மணி நேரம் மாற்றியிருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios