Knowing the fight went to the banks of the employees public disappointment ...
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை அறியாமல் வங்கிகளுக்குச் சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடுத் திரும்பினர்.
நாட்டிலுள்ள வங்கிகளில் தற்போது பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பணம் எடுப்பது உள்ளிட்ட பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக தினமும் மக்கள் கூட்டம், கூட்டமாக வங்கிக்கு செல்கின்றனர். இதனால் வங்கி ஊழியர்கள் பணி நேரத்தை கடந்து, கூடுதலாக சில மணி நேரம் வேலை செய்து வருகின்றனர்.
இவ்வாறாக செய்யும் பணிக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும், வங்கி பணியில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும், வங்கி தனியார் மயமாதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 28-ஆம் தேதி (நேற்று) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்து இருந்தது.
அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் பாரத் ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 46 வங்கி கிளைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வங்கி கிளைகளில் பணிகள் நடைபெறாததால் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் வங்கிகள் பூட்டப்பட்டு இருந்தன.
இந்த போராட்டத்தால் பொதுமக்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் கடும் அவதிப்பட்டனர். ஒரு சில வங்கி ஏ.டி.எம்.களில் மட்டும் பணம் இருந்ததால் அங்கு பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மேலும் போராட்டம் குறித்து வங்கிகளின் முன்புற பகுதியில் உள்ள அறிவிப்பு பலகையில் நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்தது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தனியார் வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை அறியாமல் பொதுமக்கள் சிலர் வங்கிகளுக்கு வந்தனர். அப்போது வங்கிகள் பூட்டப்பட்டிருந்ததை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
