கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது பாட்டியை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த 10 சவரன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் முதல் சிப்காட் கோவிந்த அக்ரஹாரம் ராஜாஜி நகரில் வசிப்பவர் ரமேஷ் (45). இவருடைய மனைவி ஜெயந்தி (38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரமேஷின் தாயார் மாதம்மா (70).

நேற்று ஜெயந்தி வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டார். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டனர். ரமேஷ் வெளியே சென்றிருந்தார். இந்த நிலையில் பாட்டி மாதம்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் அராஜகமாய் புகுந்து மாதம்மாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவீட்டு பீரோவிலிருந்த 10 சவரன் நகைகள், ரூ. 10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

வெளியில் சென்றிருந்த ரமேஷ் வீட்டுக்கு வந்து பார்த்தபோது  மாதம்மா கொலை செய்யப்பட்டிருந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் கதறி அழுதார்.

பின்னர், இதுகுறித்து, சிப்காட் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த காவலாளர்கள் இந்த கொலை மற்றும் கொள்ளை குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து 70 வயது பாட்டியை கொன்றுவிட்டு நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.