KD Rajendra balaji should act as minister not as owner of a private company

சேலம்

“கே.டி.ராஜேந்திரபாலாஜி தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் போல் இல்லாமல் அமைச்சர் போல் தயவு செய்து செயல்பட வேண்டும். ஒரு நிறுவனத்தை பெருமைப்படுத்தி மற்றொரு நிறுவனத்தை தவறாக கூறுவது சரியல்ல” என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில், “தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணியை அரசு தொடங்கி இருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். குறிப்பாக மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை முதலமைச்சர் தொடங்கி இருப்பதாக வருகிற செய்தி பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.

மழை வரும்போது அவர்கள் தூர்வாரும் பணியை தொடங்கி இருக்கிறார்கள். இரண்டு மாதத்திற்கு முன்னதாக இந்தப் பணியைத் தொடங்கியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் மண்ணை விவசாயிகள், மண்பாண்டம் மற்றும் பொம்மைகள் செய்யக் கூடியவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

ஆற்று மணலை நேரடியாக விற்பனை செய்யும் நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இருந்தாலும் மணலின் விலை இதற்கு முன்பு இருந்ததை விட அதிகப்படியாக உள்ளது என்ற கருத்து நிலவுகிறது.

என்னுடைய துறையைப் பொறுத்தவரைக்கும் ஒரு துறைமுகத்தையே தமிழகத்திற்கு பிரதமர் மோடி தந்துள்ளார். இனயம் துறைமுகம் நடைமுறைக்கு வரும்போது இந்தியாவில் உள்ள துறைமுகத்தில் தலைசிறந்த துறைமுகமாக விளங்கும். மேலும் அது நாட்டுக்கு பெருமைச் சேர்க்கும் விதமாக வணிகத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

சாலைப் போக்குவரத்தை பொறுத்தவரை கிழக்கு கடற்கரை சாலை அமைப்பதற்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய மந்திரி நிதின்கட்காரி தெரிவித்தார். ஆனால, தமிழக அரசு இன்னமும் சரியான முடிவு எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.

ஒரு அமைச்சர் (கே.டி.ராஜேந்திரபாலாஜி) தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் போல் இல்லாமல் அமைச்சர் போல் தயவு செய்து செயல்பட வேண்டும். ஒரு நிறுவனத்தை பெருமைப்படுத்தி மற்றொரு நிறுவனத்தை தவறாக கூறுவது சரியல்ல. அந்த நிறுவனத்தில் தவறு இருக்கும் என்று கூறினால், அதை தவறு இல்லாமல் ஆக்க வேண்டிய பொறுப்பு அமைச்சரிடம் உள்ளது. துறை சம்பந்தமான வளர்ச்சியில் அமைச்சர் சவால் விடுவது தேவையில்லாதது.

தமிழக அரசு 100 நாட்கள் ஆட்சியில் இருந்ததே சாதனை தான்.

நமது நாட்டு கால்நடைகளை தோல் பொருட்கள் தயாரிக்கவும், இறைச்சிக்காகவும் வெளிநாடு கொண்டுச் செல்கின்றனர். நாட்டில் உள்ள கால்நடைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிக்கும் மத்திய அரசின் முடிவை தயவு செய்து அரசியலாக்க வேண்டாம். மத சம்பந்தமான எந்த விஷயத்தையும் இதில் குறிப்பிடவில்லை.

உருக்காலை தனியார்மயம் ஆகப்போகிறது என்ற வதந்திக்கு எல்லாம் நான் எப்படி பதில் சொல்ல முடியும். எந்த ஒரு அரசு நிறுவனமும் தனியார் மயமாக்க நானும், இந்த அரசும் விரும்பாது.

ரூ.16 கோடி மத்திய அரசு நிதியில் இருந்து விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

“நீட்” தேர்விற்காக தமிழக அரசு மாணவ, மாணவிகளை தயார்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அரசு அதை செய்யவில்லை.

மு.க.ஸ்டாலின் விவசாயிகளோடு ஆலோசனை நடத்திவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக பிரதமரை சந்திக்க முடிவு செய்தார். அதனால் அது நிறைவேறவில்லை” என்று அவர் கூறினார்.

இந்தப் பேட்டியின்போது பா.ஜ.க.வின் இணை கோட்டப் பொறுப்பாளர் அண்ணாதுரை, மாநகர மாவட்டத் தலைவர் கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.