நாகர்கோவில்,

தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கக் கூடாது என்று கேரளா அணை கட்டுகிறது. ஆனால், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. பதுக்கி வைத்திருந்த 1200 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கேரளாவுக்கு செல்லும் பேருந்துகளில் ரேசன் அரிசி கடத்த சிலர் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் மற்றும் கிருஷ்ணன் கோவில் பகுதிகளில் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் ஒன்றுக் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி கோலப்பன், வருவாய் ஆய்வாளர்கள் மந்திரமூர்த்தி, அனந்தகோபால், ரமேஷ் மற்றும் இம்மானுவேல் ஆகியோர் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையப் பகுதி மற்றும் கிருஷ்ணன்கோவில் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் அதிகாரிகள் சோதனை அதிரடியாக அரங்கேற்றினர்.

அப்போது வடசேரி பேருந்து நிலையம் மற்றும் கிருஷ்ணன் கோவில் ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 60 மூட்டைகளில் மொத்தம் 1200 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி இருந்தது கண்டுப்பிடிக்ப்பட்டது.

அவற்றை ஊரடங்கிய பின்பு, கேரளா செல்லும் பேருந்துகளில் கடத்திச் செல்ல திட்டமிட்டு பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவற்றை கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

அணை கட்டி தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்க நினைக்கும் கேரள மாநிலத்திற்கு, தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக வழங்கப்படும் ரேசன் அரிசி கடத்தப்படுவது என்பது மிகவும் வருத்தமளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று மக்கள் தெரிவித்தனர்.