கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய 10 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி 60 நாட்கள் நடைபெற்று வந்த போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களின் ஜாமின் மனுவை நீதிமன்றம் ஏற்றதை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்பதற்காக போராடிய 10 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள அய்யனார்கோயிலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என போராட்டம் நடத்திய பத்து பேர் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களை விடுதலை செய்யும்வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். 

ஆனால், அவர்களின் மனு இரண்டு முறையாக தள்ளபடி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களின் போராட்டம் தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 10 பேரின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்றுக் கொண்டது. இதனை அடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.