திமுக தொண்டர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலிவுற்ற அதிர்ச்சியால் 21 திமுக தொண்டர்கள் உயிரிழந்தது துயரம் அளிக்கிறது. திமுக தொண்டர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இதனால் மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்து, எழுந்து வா தலைவா...காவேரியை வென்று..வா...தலைவா என்ற வீர வசன முழக்கம் எழுப்பினர். தலைவா வா என்று தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் வீண்போகவில்லை என்றும் கூறியுள்ளார்.

 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. கருணாநிதி உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என ஸ்டாலின் தெரிவித்தார்.  அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். திமுக என்ற மாபெரும் இயக்கம் உடன்பிறப்புகள் தாங்கி நிற்கும் கோட்டை என்றார். 

உடன்பிறப்புகளில் ஒருவரை இழந்தால் கூட அது மனதை இடிபோல் தாக்குகிறது. மேலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாராக மந்திரத்தை மனதில் கொள்ள வேண்டும் என ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.