பத்து ரூபாய் கிடைக்கவில்லையே…பொங்கல் நாளில் ஏமாற்றம் அடைந்த திமுக தொண்டர்கள்…

தமிழர்கள் தங்களது பாராம்ரியத்தை பெரிதும் மதித்துக் கொண்டாடும் மிகப் பெரிய பண்டிகை பொங்கல் திருநாள். இந்த திருநாளை திமுக வினர் கிச் சிறப்பாக கொண்டாடி மகிழ்வர்.

அதுவும் கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்தபோது பொங்கல் திருநாளை தமிழ் புத்தாண்டு என அறிவித்து சட்டம் இயற்றப்பட்டது.மேலும் தமிழ் புத்தாண்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் தினத்தன்று திமுக தலைவர் கருணாநிதி  அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து  சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் தன்னை பார்க்க வரும் தொண்டர்களுக்கு ஆசி வழங்குவதுடன் 10 ரூபாய் கொடுப்பது வழக்கம். மேலும் தொண்டர்களுடன் கருணாநிதி புகைப்படமும் எடுத்துக் கொள்வார்.

திமுக தொண்டர்களும் அந்த 10 ரூபாயை பொக்கிசமாக வைத்து பாதுகாத்து வருவார்கள். அதுவும் கருணாநிதியிடம் 10 ரூபாய் வாங்கியதை பெருமையாக சொல்லி திரிவார்கள். கருணாநிதியிடம் 10 ரூபாய் வாங்கிக் கொண்டு ஆயிரக்கணக்கான ரூபாய் நிதியாக அவர்கள் வழங்குவார்கள்.

ஆனால்  தற்போது கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருப்பதால் அவரிடம் இந்த பரிசு பெற முடியாமல் திமுக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் இரண்டு முறை மருத்துவமனை சென்று திரும்பிய அவருக்கு ஓய்வு வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதால், இந்த முறை கருணாநிதி யாரையும் அவர் சந்திக்கவில்லை.

அதே நேரத்தில் கருணாநிதி தனது குடும்ப உறுப்பினர்களை மட்டுமே சந்தித்தார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது மனைவியுடன் சென்று கருணாநிதியிடம் ஆசி பெற்றார். இதேபோல் கனிமொழி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கருணாநிதியிடம் இன்று காலை ஆசி பெற்றனர்.