அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில் காவல் துறை சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து ஒலிப்பெருக்கியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் 20 ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த வருடமும் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில் காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது.

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பேரணிக்கு காவல் ஆய்வாளர் இராதாகிருஷ்ணன் தலைமை வகித்துத் தொடக்கி வைத்தார்.

இந்தப் பேரணியானது சிதம்பரம் சாலையில் தொடங்கி நான்கு சாலை, கடை வீதி, அண்ணா சிலை, பேருந்து நிலையம், தா.பழூர் சாலை வழியாகச் சென்று காவல் நிலையத்தில் முடிவுற்றது.

ஆண்டிமடத்தில் நடைபெற்ற பேரணிக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமை வகித்துத் தொடக்கி வைத்தார்.

இந்தப் பேரணியானது ஜெயங்கொண்டம் சாலையில் தொடங்கி பேருந்து நிலையம், நான்கு சாலை, கடை வீதி, திருமுட்டம் ரோடு வழியாக காவல் நிலையத்தில் முடிவுற்றது,

இந்தப் பேரணியின் போது, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து “தலைக்கவசம் உயிர்க்கவசம்” என்று ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.