மரக்காணம்
மரக்காணம் தாலுக்காவில் வறட்சியால் பாதிக்கபட்ட நிலங்களை கணக்கெடுப்பதில் அதிகாரிகள் மோசடி செய்வதாகவும், நிலமே இல்லாதவர்களின் பெயர்கள் நிவாரணத் தொகை பட்டியலில் சேர்க்கப்பட்டுளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் 112 கிராமங்கள் உள்ளன. திண்டிவனம் தாலுக்காவில் 52 கிராமங்கள் உள்ளது. மரக்காணம் தாலுக்காவில் கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு, அனுமந்தை, கந்தாடு, சிறுவாடி, வடகோட்டிப்பாக்கம், ஆலத்துார், ஓமிப்பேர் உள்பட 60 கிராமங்கள் உள்ளது. இங்கு 14 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது.
விவசாயிகள் நெல், மணிலா, கரும்பு, உளுந்து போன்ற வேளாண் பயிறும், தற்பூசணி, மரவள்ளி உள்ளிட்ட தோட்டகலை பயிர்களையும் விவசாயம் செய்து வருகின்றனர்.
விவசாயிகள் 70 சதவீதம் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலமாகவும், 30 சதவீதம் ஏரி தண்ணீரையும் நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்தாண்டு மழை பொய்த்து போனதால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வருவாய்துறை, வேளாண்மைதுறை, தோட்டகலைதுறை அதிகாரிகள் வறட்சி நிலவரம் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.
திண்டிவனம் தாலுக்காவில் உள்ள மரக்காணம் பகுதியை மட்டும் அதிகாரிகள் வறட்சி குறித்து கணக்கெடுத்து கொடுத்துவிட்டு மரக்காணம் தாலுக்காவில் உள்ள மரக்காணம் பகுதியை அதிகாரிகள் வறட்சி நிலவரம் குறித்து எந்த ஒரு தகவலும் கொடுக்கவில்லை.
இதனால் மரக்காணம் தாலுக்காவில் உள்ள 60 கிராமங்கள் வறட்சியால் பாதிக்காத பகுதியாக கணக்கில் எடுத்து கொள்வதாக இருக்கின்றனர்.
இந்நிலையில் திடீரென சிறு குக்கிராமங்களில் வறட்சி நிலவரம் குறித்து வருவாய்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். இதனால் வறட்சியால் பாதிக்கபட்ட அனைத்து நிலங்களையும் அதிகாரிகள் கணக்கெடுக்காமலும், நிலமே இல்லாதவர்களின் பெயர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க சேர்க்கப்பட்டதாகவும் விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.
தோட்டகலைதுறை அதிகாரிகள் இதுவரை கணக்கெடுக்கும் பணியை தொடங்கவில்லை. மேலும் அதிகாரிகளின் இந்த மெத்தன போக்கால் மரக்காணம் தாலுக்காவில் வறட்சியால் பாதிக்கபட்ட பகுதியாக அரசு அறிவிப்பதில் சிக்கல் ஏற்படும் நிலையுள்ளது.
