தனது தம்பியின் மரணத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி தான் காரணம் என கொடநாடு கொலையில் தொடர்புடைய கனகராஜின் அண்ணன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ஒன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 23 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

அப்போது கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு சம்பந்தமாக கனகராஜ், சயான் ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் என்பவர் சேலம் அருகே கார் விபத்தில் உயிரிழந்தார்.

அதேபோல், சயான் காரின் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார். மேலும் காரில் இருந்த அவரது மனைவியும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சயான் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கார் ஓட்டுனர் கனகராஜின் அண்ணன் தனபாலிடம் கோத்தகிரியில் போலீசார் விசாரணை நடத்தினர்.

சுமார் 4 மணி நேரத்த்திற்கு மேலாக நடைபெற்ற இந்த விசாரணையை தொடர்ந்து தனபால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தனது தம்பியின் மரணத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி தான் காரணம் என பரபரப்பு புகாரை தெரிவித்தார்.

மேலும் இந்த போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் நீதிமன்றத்தை நாட போவதாகவும் குறிப்பிட்டார்.