விழுப்புரம்,

விழுப்புரத்தில் பொங்கல் திருவிழாவை ஒட்டி, பொங்கல் பொருட்களின் விற்பனைக்கு வந்த கூட்டத்தால் கலைக் கட்டியது பெரிய சந்தை. இதனால், விற்பனையாளர்களும், நுகர்வோரும் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா இன்று உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களினால் பெரும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழா விழுப்புரம் மாவட்டத்திலும், புதுப்பானையில் பொங்கலிடும் மரபிற்காக மண்பாண்ட தொழிலாளர்கள் விதவிதமான பொங்கல் பானைகளை தயாரித்து விழுப்புரம் நகரில் விற்பனைக்காக வைத்தனர்.

பொங்கல் என்றாலே தித்திக்கும் கரும்புகளுக்கு தனியிடம் உண்டு. அவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

கடந்த ஆண்டை காட்டிலும், இந்தாண்டு கரும்புகள் சற்று விலை ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.550 முதல் ரூ.650 வரையும், ஒரு ஜோடி கரும்புகள் ரூ.60 முதல் ரூ.70 வரையும் விற்கப்பட்டன.

இந்த ஆண்டு 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.650 முதல் ரூ.750 வரையும், ஒரு ஜோடி கரும்புகள் ரூ.70 முதல் ரூ.80 வரையும் விற்கப்படுகிறது.

உளுத்தம் பருப்பு விலையோடு ஒப்பிடுகையில் இந்த கரும்பு விலை உயர்வு அவ்வளவு பெரிது ஒன்றும் இல்லை.

மக்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் என்பது சிறப்பு மிக்கது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக சந்தை மற்றும் கடைவீதிகளுக்கு திரண்டுச் சென்று ஆசையுடன் கரும்புகளை வாங்கிச் செல்கின்றனர்.

திருமணம் முடிந்து தலைப்பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர்வரிசைக்காக சில பெற்றோர்கள் கட்டு, கட்டுகளாக கரும்புகளை வாங்குகின்றனர்.

அதுபோல் பொங்கல் விற்பனையில் அங்கம் வகிக்கும் மஞ்சள் கொத்து, சிறுவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும், காய்கறி வகைகளும் விழுப்புரம் எம்.ஜி. சாலையில் உள்ள பெரிய சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

நன்கு திடமான மஞ்சன் கொத்தின் விலை ரூ.20–க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மஞ்சள் கொத்து மற்றும் கிழங்கு வகைகள், காய்கறி வகைகள் என பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் மகிழ்வுடன் வாங்கிச் சென்றனர்.

இதனால் பொங்கல் பொருட்களின் விற்பனை தொடக்கம் முதலே அசத்தலாக இருந்தது.

பொங்கல் பொருட்களை வாங்க விழுப்புரம் நகரில் நேற்று எம்.ஜி.சாலை பெரிய சந்தை, பாகர்ஷா வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதிற்று.

விழுப்புரம் – புதுச்சேரி சாலை, கே.கே.சாலை, பாகர்ஷா வீதி, திரு.வி.க. வீதி, காமராஜர் வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகள் சந்தைக்குள் பொருட்கள் வாங்கச் சென்றவர்களாலும், பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்தவர்களாலும் அந்தப் பகுதியே கலைக் கட்டியது.