வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 21 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர் பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தப்ரேஸ். இவர் தனியார் காலணி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தப்ரேஸ், மனைவி மற்றும் தாயுடன் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர், இன்று காலை வீடு திரும்பிய தப்ரேஸ், வீடு உள் பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்ற பார்த்போது, வீட்டில் இருந்த பொருட்கள் களைந்து காணப்பட்டன. மேலும், வீட்டின் பின் பக்க கதவு திறந்து இருந்தது. வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டிருப்பதையும், அதில் இருந்த 21 சவரன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்க பணம் மற்றும் பட்டுப்புடவைகள் என அனைத்தையும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளர் தப்ரேஸ், வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
