Jayalalithaa disproportionate assets case can not be declared guilty

ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் சொத்துகுவிப்பு வழக்கில் அவரை குற்றவாளி என பிரகடனம் செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாயும், மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதித்து நீதிபதி மைக்கேல் டி. குன்ஹா தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இதில், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. பெங்களூரு நீதிமன்றம் அளித்த தண்டனை மற்றும் அபராதத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனால், ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு விதித்த 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை வசூலிக்கும் முறை குறித்த தெளிவு இடம்பெறவில்லை என்று கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அபராதத் தொகையை வசூலிப்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தில் இருந்து அவருக்கு விலக்கு தரக்கூடாது எனவும் கர்நாடக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், அதில் மேல்முறையீட்டு வழக்கு முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பின்னர்தான் ஜெயலலிதா மறைந்தார். ஆகையால் அவரையும் குற்றவாளி என பிரகடனம் செய்து அவருக்கு கீழ்நீதிமன்றம் விதித்திருந்த 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது குறித்து உத்தரவிட வேண்டும். அதற்காக பிப்ரவரி 14-ந் தேதி அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அவரை வழக்கில் குற்றவாளி என பிரகடனம் செய்ய அரசியல் சாசனத்தில் இடம் இல்லை எனவும், எனவே சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என பிரகடனம் செய்ய இயலாது எனவும் தீர்ப்பளித்து கர்நாடகாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.