தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார். தற்போது பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே அவருக்கு அளிக்கப்படுகிறது என அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறினார்.
கடந்த செப்டம்பர் 22ம்தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். இதைதொடர்ந்து அவருக்கு பிசியோ தெரபி மூலம் உடற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதைதொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் எப்போது விரும்பினாலும் வீட்டுக்கு செல்லலாம் என அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவர் எடுத்துவரும் சிகிச்சை குறித்தும் அப்பல்லோ டாக்டர்கள் குழுவினருடன் கேட்டறிந்தனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர், பூரணமாக குணமடைந்து விட்டதாக அப்பல்லோ நிர்வாக தலைவர் பிராதாப் சி ரெட்டி சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்தார்.
இந்தநிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுவிட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று தொடர்பான நோய்கள் குணமாகிவிட்டன. தற்போது முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கபடுகிறது.
பணிக்கு திரும்புவதற்காக முதல்வர் ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் அரசு தொடர்பான உத்தரவுகளை முதல்வர் வழங்குகிறார். முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றுள்ளதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் என்றார்.
