முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரேட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் வெளியிட்டது. இந்த தகவல் அடுத்த சில நிமிடங்களில், அனைத்து ஊடகங்களிலும் வெளியானதால், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அப்பல்லோ மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். உடனடியாக, அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட அதே நேரத்தில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வந்தனர். அதேபோல், சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கும் கமிஷனர் ஜார்ஜ் உள்பட அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகளும் வந்தனர்.

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும், டிஜிபி அலுவலகத்தில் இருந்து இரவோடு இரவாக உத்தரவு பறந்தது. அனைத்து எஸ்.பி.க்களும் உடனடியாக அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

மேலும், ‘ரெட் அலெர்ட்’ எனப்படும் உஷார் நிலையும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் எஸ்பிக்களுக்கு உத்தரவிடப்பட்டது.

சென்னை மாநகர் முழுவதும் இரவோடு இரவாக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். முக்கிய இடங்களிலும் அதிக போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல், மத்திய போலீசாரும், துணை ராணுவமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து போலீசார், எவ்வித அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்க நேற்று இரவு முதல் இதுவரை 1867 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.