ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்….விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  மரணம் தொடர்பாக சசிகலா, ஓபிஎஸ் உட்பட 186 பேர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை  சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடலூரை சேர்ந்த வழக்கறிஞர் செல்வவிநாயகம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 
அதில், தமிழக முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது  ஊடகங்கள் வாயிலாக தெரியவந்தது.

இந்நிலையில், திடீரென கடந்த டிசம்பர் 5ம் தேதி  இரவு  ஜெயலலிதா இறந்துவிட்டதாக அறிவித்தனர். ஜெயலலிதாவை ஓபிஎஸ், சசிகலா, விஜயபாஸ்கர் ஆகியோர்தான் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக  சந்தேகிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுகவின் 127 சட்டமன்ற உறுப்பினர்களும், 48 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும்  பொன்னையன், மதுசூதனன், பண்ருட்டி ராமச்சந்திரன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோருடன் பிரதாப் ரெட்டி, அவரது மகள்  சங்கீதா ரெட்டி ஆகியோர் கொலையை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மொத்தம் 186 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மே 2ம் தேதி புகார் அளித்தேன். ஆனால்,  இதுவரை காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. எனவே, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை ஆணையருக்கும்,  தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறி இருந்தார்.

இந்த மனு சென்னை சைதாப்பேட்டை 18வது அமர்வில் நீதிபதி மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணை  கடந்த பல  நாட்களாக தள்ளிப்போய் கொண்டே  இருந்தது. இந்நிலையில் மனுவை விசாரித்த நீதிபதி அதனை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.