தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது.  கடைசி நாளான இன்று ஏற்கெனவே பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டதோடு  2017-18-ம் ஆண்டிற்கான நிதித் துறையின் புதிய அறிவிப்புகளை நிதியமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது.கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த  இந்த கூட்டத்தொடரில், துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது. கடைசி நாளான இன்று பேரவையில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்களுடன், இன்று தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து நிதியமைச்சர் ஜெயகுமாரின் பதிலுரையில் 2017-18-ம் ஆண்டிற்கான நிதித் துறையின் புதிய அறிவுப்புகளை வெளியிட்டார்.

அதன்படி சார் கருவூலங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் 885.72 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டுதல்

புதிய கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகங்கள் 72. 77 இலட்சம் செலவில் அமைத்தல்

புதிய வாகனங்கள் 50 இலட்சம் ரூபாய் செலவில் வாங்குதல்  

கருவூலம் மற்றும் கணக்குத் துறை உயர் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல்

பொதுத்துறை வங்கித் திட்டத்தில் ஒய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்களை கருவூலம் மற்றும் கணக்குத் துறை மூலம் நேரடி ஓய்வுதியம் பெறும் திட்டத்திற்கு மாற்றுதல்….ஓய்வூதியர் தரம் தளம் ஏற்படுத்துதல்…..காலியாக உள்ள இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பனியிடங்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்தல்

கூட்டுறவு தணிக்கைத் துறை பணியிடங்களை மறுசீரமைப்பு செய்து துறையின் செயல்பாட்டினை மேம்படுத்துதல்

கூட்டுறவு தணிக்கைத் துறை தணிக்கையாளர்களுக்கு கணினி பயிற்சி வழங்குதல்

அரசுத்துறை மற்றும் நிறுவனத் தணிக்கைத் துறைக்கென புதிய வலைதளம் அமைத்தல்

நிதித்துறை பணியாளர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல்

நிதித்துறையில் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு துறை செயல்பாடுகள் குறித்த பயிற்சி அளித்தல் ஆகிய 12 அறிவிப்புகளை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார்