பொதுவாக கசங்காத சட்டையும், நகர வாழ்கையும் கொண்ட இளைஞர்கள் சுயநலம் மிக்கவர்கள், சமூக அக்கறை இல்லாதவர்கள் என்ற எண்ணத்தை உடைத்தெறிந்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்து புதியதொரு வரலாற்றை இளைஞர்களும் மாணவர்களும் படைத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுமீதான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆவேச போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தன்னெழுச்சியாக இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மதுரை கோவை சேலம், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இளைஞர்கள் தன்னெழுச்சியா திரண்டு போராட்டம் நடத்தினர். 

கோவையில் கொடீசியா மைதானத்தில் திரண்ட மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அதற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

வழக்கமாக தமிழகத்தில் ஒரு பிரச்னை என்றால் அதுதொடர்பான போராட்டங்களை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும்தான் முன்னெடுக்கும். ஆனால், எந்தவித தூண்டுதலும் இல்லாமல் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக கிடைத்த தகவல்கள் அடிப்படையில், தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. 

குறிப்பாக ஐ.டி. கம்பெனிகளில் வேலை பார்க்கும் இளைஞர்கள் பலரும், தமிழகத்தின் உரிமைகாக்க போராட்ட களத்தில் குதித்துள்ளனர். 

இந்த முறை அரசியல் கட்சிகள் இளைஞர்களுடைய எழுச்சியை பார்த்த பின்னர் தானாக அவர்களது பின்னால் ஓடிவரும் நிலை ஏற்பட்டது. 

சாதாரணமாக ஐ.டி. கம்பெனி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், நகர வாழ்க்கை வாழ்பவர்கள், தமிழ்க்கலாச்சாரம், விவசாயிகள் பிரச்னை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள் என்ற நிலையை உடைத்து, மாணவர்கள், இளைஞர்கள் லட்சக்கணக்கில் தமிழகம் முழுவதும் திரண்டிருப்பது மத்திய அரசையும் பீட்டா அமைப்பினரையும் அசைத்துப்பார்த்துள்ளது என்றால் அது மிகையாகாது.