தமிழக போராட்ட வரலாற்றில் போலீஸ் ஸ்டேஷன் கொளுத்தப்பட்டதும், வன்முறையாளர்கள் அதற்கு ரசாஅயன பவுடரை தூவி எரித்ததும் போலீசாரை திடுக்கிட வைத்துள்ளது. இதுகுறித்து எரிக்கப்பட்ட ஸ்டேஷன் பொருட்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களின் எழுச்சியால் அவசரசட்டம் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

போராட்டம் நடத்திய மாணவர்கள் , இளைஞர்கள் மெரினாவில் லட்சக்கணக்கில் கூடி இருந்தனர். பின்னர் போலீசார் மற்றும் அரசு வேண்டுகோளை ஏற்று பெரும்பாலானோர் கலைந்து சென்றனர். 

ஒரு சிலர் குழுக்கள் மட்டும் இளைஞர்கள் போர்வையில் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். இதில் ஏற்பட்ட வன்முறையில் போலீசார் தடியடி நடத்தினர். ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம் கொளுத்தப்பட்டது. 

காவல்நிலையத்தை கொளுத்திய சமூக விரோதிகள் ஸ்டேஷனை சுற்றி மோட்டார் சைக்கிள்களை போட்டு கொளுத்தினர். இதில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் சிக்கி கொண்டவர்களை வெளியேற விடாமல் வெளியே கதவையும் பூட்டிவிட்டனர்.

பின்னர் போலீசார் வந்து அவர்களை விரட்டி அடித்து ஸ்டேஷனில் இருப்பவர்களை மீட்டனர். இதில் ஒரு உதவி கமிஷனரும் அடக்கம். 

ஸ்டேஷனை கொளுத்தியவர்கள் குறித்து வெளிவந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதை சைபர் கிரைம் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஸ்டேஷனை கொளுத்தும் இளைஞர் கூட்டம் பெட்ரோல் ஊற்றி மோட்டார் பைக்குளை எரிக்கவில்லை மாறாக பாஸ்பரஸ் தூளை மோட்டார் சைக்கிள்கள் மீது தூவுவது தெரிய வந்தது. 

பாஸ்பரஸ் பவுடர் தனியாக அதற்கு என்று இருக்கும் கலவையுடன் இருக்க வேண்டும். வெளியே எடுத்தால் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் கலந்து உடனே எரியும். இதனால் இந்த பவுடரை எதன் மீதாவது தூவினால் அது சிறிது நேரத்தில் அப்பொருளை எரித்துவிடும்.

சமூக விரோதிகள் குடிசைகளை கொளுத்த தடையம் தெரியாமல் இருக்க இதுபோன்ற செயலில் ஈடுபடுவார்கள் . போலீசாரிடம் சிக்கிய வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் 

மோட்டார் சைக்கிளின் மீது சிகப்பு பனியன் அணிந்த வாலிபர் பாஸ்பரஸ் பவுடரை தூவுவது தெரிய வந்தது. திடீரென போராட்டத்தில் குதிப்பவர்கள் இதுபோன்ற செயலில் எப்படி முன்னேற்பாடுடன் இருக்க முடியும்.

இதன் மூலம் வன்முறை திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது என்பதும் . விஞ்ஞான ரீதியாக பாஸ்பரஸ் பவுடர்களை உபயோகப்படுத்தியது எப்படி , அவர்களுக்கு இதை சப்ளை செய்தது யார் , இதன் பின்னனி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரிக்கப்பட்ட ஸ்டேஷனில் உள்ள பொருட்கள் , மோட்டார் பைக்குகளின் மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.