வலுக்கட்டாயமாக வெளியேற்றம்.. மெரினாவில் போலீஸ் அதிரடி…
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி உலகம் எங்கும் தமிழர்கள் கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 16 ஆம் தேதி அலங்காநல்லுரில் தொடங்கிய இந்தப்போராட்டம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது,
சென்னை மெரினாவில் லட்சக்கணக்கானோர் தொடர்ந்து போராட்டத்தில ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே இன்று சட்டப் பேரவை கூடவுள்ளதாலும், குடியரசு தினத்தையொட்டி காமராஜர் சாலையில் போலீசாரின் ஒத்திகை நடக்க உள்ளதாலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றும் வேலையில் காவல்துறை இறங்கியுள்ளது.
இன்று அதிகாலை மெரினா கடற்கரையில் இருந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர், ”அமைதியான முறையில் போராடினீர்கள், அதேமுறையில் கலைந்து செல்லுங்கள்.
போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க போராட்டக்காரர்கள் இதுவரை அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளித்தீர்கள்” என்று போலீசார் கேட்டுக் கொண்டனர்
மயிலாப்பூர் டிசி இளைஞர்களிடையே இது குறித்த பேசினார். தொடர்ந்து அங்கிருந்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றத் தொடங்கினர்.
ஆனால் அதற்கெல்லாம் போராட்டக் குழுவினர் அசரவில்லை.அங்கிருந்து வெளியேற மறுத்ததுடன் கடற்கரையின் உட்பகுதிக்கு சென்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
