பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னையில் மாணவர்கள் பற்ற வைத்த தீ தமிழகம் முழுவதும் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் மதுரையில் தன்னெழுச்சியாக திரண்ட மாணவர்கள் ஜல்லிக்ட்டுக்கு ஆதரவாக ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நேற்றும் மாணவர்கள் பல்வேறு கல்லுரிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்களும், சட்டக்கல்லுரி மாணவர்களும் தமுக்கம் மைதானம் அருகே திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்திறே தீர வேண்டும், உச்சநீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்ககூடாது, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஆனாலும் ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்றும் இந்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என மாணவர்கள் ஆவேசத்துடன் கூறினர்.

திருச்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். புதுக்கோட்டை, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், தனிச்சியம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இருக்கும் தடையை நீக்கி, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தி மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த வெள்ளலூர் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

வெள்ளலூரை சுற்றி உள்ள 60 கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வணிகர்களும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மேலுர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.