தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினல், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை விதித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதைதொடர்ந்து உச்சநீதிமன்ற தடையை மீறி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாலிபர்கள், பொதுமக்கள் கண்டு களிக்கவும், கலந்து கொள்ளவும் சென்றனர். ஆனால், மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால், ஜல்லிக்கட்டு போட்டி தடுத்து நிறுத்தப்பட்டது.

அப்போது, சில வாலிபர்கள், காளைகளை கழற்றிவிட்டனர். இதனால், போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி 250க்கு மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர், அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இற்கிடையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று இரவு முதல் விடிய விடிய பொதுமக்கள் பேராட்டம் நடத்தினர். மேலும், இந்த போராட்டத்தில் உள்ளூர் மக்கள் கலந்து கொண்டதால், பெரும் பரபரப்பு நிலவியது.

பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது மட்டுமின்றி, சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில்,கைது செய்து சிறை வைக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதில், 32 பேர் மட்டும் வெளியேறினர். மற்ற அனைவரும், மண்டபத்தில் இருந்து வெளியே மறுத்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. அலங்காநல்லூர் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.