தச்சங்குறிச்சி திருவிழா… இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு !! விறு விறு காளையர்கள் !!
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டு தனித்துவம் பெற்று விளங்குகிறது. காளைகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவற்றிற்கு பெருமை சேர்க்கவும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டி தென் மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு மேல் நடைபெறும். இதில் வீரர்களுக்கு அடங்காத காளைகளுக்கு பலவித பரிசுகள் வழங்கப்படும்.
அவ்வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு தொடக்க விழாவில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியர் கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர
ஜல்லிக்கட்டில் சுமார் 800 காளைகள் பங்கேற்றுள்ளன. காளைகளை அடக்குவதற்காக 450 காளையர்கள் களத்தில் இறங்கி உள்ளனர். வாடிவாசல் வழியாக களத்தில் பாய்ந்தோடும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து பரிசுகளை தட்டிச் சென்றனர். மாடுபிடி வீரர்கள் மூன்று பகுதிகளாக களத்தில் இறங்கி காளைகளை அடக்குகின்றனர்.
ஜல்லிக்கட்டை காண்பதற்காக புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாளை மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.