ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. 
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மாணவர்கள், பொது மக்கள் தாங்களாக ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி பொது மக்கள் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மதுரை அருகே கரிசல் குளத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 22 க்கும் மேற்பட்ட காளைகளும், 55 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன மதுரை அவனியாபுரத்தில் இன்று தடையை மீறி ஜல்லிகட்டு நடைபெற்றது. அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இன்று அதிகாலையிலேயே நுற்றுக்கணக்கான பொது மக்களும், மாடுபிடி வீரர்களும் திரண்டனர்.

வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கி தங்கள் வீரத்தை வெளிப்படுத்தினர். அங்கிருந்த பொது மக்கள் கைகளைத் தட்டியும், விசில் அடித்தும் வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.

ஆனால் வழக்கம் போல் அங்கு தயாராக இருந்த காவல் துறையினர்,ஜல்லிக்கட்டு நடத்தியவர்களையும், மாடுபிடி வீரர்களையும் கைத செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சிலர் காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி, ஜல்லிக்கட்டு பேரவையினர் அவனியாபுரத்தில் கோரிக்கை ஊர்வலம் நடத்தினர்.