சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில், 5000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு, பீட்டா அமைப்புக்கு தடை செய், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், அம்பத்தூர் தொழிற்பேட்டை 2, 3வது பிரதான சாலைகளில் அமைந்துள்ள சாப்ட்வேர், ஐடி நிறுவனங்கள், சிறுகுறு தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் 5000க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை 2வது பிரதான சாலையில் தொடங்கி ஆம்பிட் பூங்கா வரை பல கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆண், பெண் தொழிலாளர்கள் 5000க்கு கை கோர்த்தபடி நின்று, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். பீட்டா அமைப்புக்கு தடை செய்யவேண்டும். மத்திய மற்றும் மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுத்தி கண்டன கோஷமிட்டனர்.

அதேபோல், அம்பத்தூர் பகுதியில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் ஒன்றிணைந்து அம்பத்தூர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் அம்பத்தூர், பாடி, கொர்ட்டூர், திருமுல்லைவாயல், அயப்பாக்கம், முகப்பேர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கு மேற்பட்ட வாலிபர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்தி கேஷமிட்டனர்.அப்போது, அவர்களது கையில், பல்வேறு வாசகங்கள் அடங்கிய தட்டிப்போர்டு, பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.