Asianet News TamilAsianet News Tamil

பதவியை காத்துகொள்ள பிரதமரை பலமுறை டெல்லி சென்று பார்த்த முதல்வர், காவிரி தண்ணீரை பெற மோடிக்கு கடிதம் எழுதுவதா?

Is the Chief Minister who visited the Prime Minister several times to preserve the post and write to Modi to get Cauvery water?
Is the Chief Minister who visited the Prime Minister several times to preserve the post and write to Modi to get Cauvery water?
Author
First Published Jan 18, 2018, 10:22 AM IST


தஞ்சாவூர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை காத்து கொள்ள பலமுறை டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். ஆனால், காவிரி தண்ணீரை பெற்று தர கடிதம் எழுதினால் போதுமா? என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சம்பா பயிரை காக்க கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீரை பெற்று தர வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் வருகிற 27-ந் தேதி ரெயில் மறியல் நடத்துவது என அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து விவசாயச் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பு) மாநிலப் பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், "தற்போது மேட்டூர் அணையில் 20 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை வைத்து சம்பா பயிரை காக்க முடியாது. கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்துக்குரிய தண்ணீரை பெற்றால் மட்டுமே சம்பா நெற்பயிரை காத்து அறுவடை செய்ய வாய்ப்பு இருக்கிறது.

இதனால் 15 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் பல இலட்சம் ஏக்கரில் பாதிக்கப்பட்டு வரும் நெற்பயிரை காக்க தண்ணீரை பெற்று தர வேண்டும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை காத்து கொள்ள பலமுறை டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.ஆனால், காவிரி தண்ணீரை பெற கடிதம் எழுதுவது போதிய நடவடிக்கை அல்ல. உடனே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்று பிரதமரை நேரில் சந்தித்து காவிரி டெல்டா விவசாயிகளின் நிலைமையையும், கருகும் நெற்பயிர்கள் குறித்தும் விளக்கி கூறி தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகத்தில் தற்போது சாகுபடி பணி முடிவடைந்துவிட்டது. இனிமேல் அவர்களுக்கு தண்ணீர் அதிகமாக தேவைப்படாது. காவிரிடெல்டா மாவட்டங்களுக்கு தான் தண்ணீர் தேவைப்படுகிறது. கர்நாடகத்தில் உள்ள அணைகளில் மொத்தம் 100 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின்படி இன்னும் 81 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகஅரசு நமக்கு தர வேண்டும். அதை நாங்கள் கேட்கவில்லை. வெறும் 15 டி.எம்.சி. தண்ணீரை தான் கேட்கிறோம்.

இந்த தண்ணீரை மத்திய அரசு பெற்று தர வலியுறுத்தி வருகிற 27-ஆம் தேதி (சனிக்கிழமை) காவிரி டெல்டா மாவட்டங் களான தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடைபெறும் இந்த போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். அந்தந்த கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறோம்.

வழக்கமாக ஜனவரி 28-ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்படும். ஆனால், இந்தாண்டு தாமதமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் 28-ஆம் தேதி அணையை மூடக் கூடாது. அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை தண்ணீர் தேவைப்படுகிறது. அப்போது தான் அறுவடை செய்ய முடியும்" என்று அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios