Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் ரம்மி எட்டிக்காயாக கசக்கிறது, மது மாம்பழமாக இனிக்கிறதா? பால் முகவர்கள் சங்கம் கேள்வி!!

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வந்தவர்கள் உயிரைக் கொல்லும் மது விற்பனையை தடை செய்ய முன் வராதது ஏன் என பால் முகவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 

is online rummy as bitter as vinegar and wine as sweet as mango asks milk agents association
Author
First Published Apr 10, 2023, 7:36 PM IST | Last Updated Apr 10, 2023, 7:36 PM IST

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வந்தவர்கள் உயிரைக் கொல்லும் மது விற்பனையை தடை செய்ய முன் வராதது ஏன் என பால் முகவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இணைய வழி சூதாட்டமான ஆன்லைன் ரம்மி, போகர் உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக சட்டப்பேரவையில் முதலில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டம் கொண்டு வருவதற்கான முன்னெடுப்பை தொடர்ந்து முன்னெடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், சமூக நல அமைப்புகளுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பணத்தாசையை தூண்டி விட்டு, கடனாளியாக்கி, மன உளைச்சலால் தற்கொலை செய்து நூற்றுக்கும் மேற்பட்டோரின் உயிர்பலிகளுக்கு காரணமான ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழக முதல்வரும் அனைத்து வகையிலும் ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது மிகுந்த பாராட்டுக்குரியது தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இதையும் படிங்க: தனியாக சென்ற பெண்ணிடம் கேலி பேச்சு; தட்டிக்கேட்ட கணவனை குத்தி கொன்ற கஞ்சா சிறுவன்

அதேசமயம் தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தினசரி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அனகோண்டா பாம்பு போல விழுங்கி, தனது கஜானாவை அரசு நிரப்பிக் கொள்ள, இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பட்டோரையும் மதுக்கடைகளே கதியென கிடக்கச் செய்து, தமிழர்களின் உழைக்கும் சக்தியை விழலுக்கு இரைத்த நீர் போல வீணாக்கி, தொழில் நிறுவனங்களை வடமாநில தொழிலாளர்களின் உழைப்பை எதிர்நோக்கி இருக்கச் செய்தோடு மட்டுமின்றி, நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கும் சாலை விபத்துகளாலும், புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்களாலும் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்து, இளம் விதவைகள் நிறைந்த, போதைக்காக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்த, சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகமான மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழகம் விளங்கிட காரணமான மது விற்பனைக்கும் நிரந்தரமாக தடை விதித்து, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான முன்னெடுப்பையும் ஒரு சேர சேர்த்து அவசர சட்டமியற்றப்பட்டிருந்தால், அதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தால் வரலாற்று சிறப்பாக இருந்திருக்கும்.

இதையும் படிங்க: பட்டப் பகலில் ஆட்டோவில் சென்ற பெண் படுகொலை; ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல்

ஆனால் ஆன்லைன் ரம்மியால் சில நூறு பேரின் உயிர்கள் பலியானதற்காக கத்தி, கதறி, தங்களை நல்லவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆட்சியாளர்களும் (ஆன்லைன் ரம்மியால் பறிபோன உயிரிழப்புகள் ஈடுசெய்ய முடியாதது என்பதை மறுப்பதற்கில்லை), ஆண்ட கட்சியினரும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், மதுவால் வருமானம் ஈட்டி அதன் மூலம் அரசை நடத்திட நினைக்கும் அரசையும், ஆட்சியாளர்களையும் அழுத்தமாக கண்டித்து, மக்கள் நலனை மட்டுமே மனதில் கொண்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழக சட்டமன்றத்தில் அவசர சட்டமியற்ற ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை? ரம்மி என்றால் எட்டிக்காயாக கசக்கிறது, மது என்றால் மல்கோவா மாம்பழமாக இனிக்கிறதா? என்கிற கேள்வியை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மக்கள் மன்றத்தில் அழுத்தமாக எழுப்புகிறது. மேலும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் அவசர சட்டமியற்றி, அதற்கு தற்போது ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மூலம் நடைபெறும் மது விற்பனையை தடை செய்திடவும், தமிழகத்தில் பூரண மது விலக்கை உடனடியாக அமுல்படுத்திடவும் தமிழக சட்டமன்றத்தில் அவசர சட்டமியற்ற இதுவே சரியான தருணம் என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு மக்கள் நலனிற்காக அரசுக்கு உடனடியாக அழுத்தம் கொடுத்து அதனை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios