Is it wrong to provide setup boxes? District Cable TV to report immediately Section Officer Instruction ...
விருதுநகர்
கேபிள் டி.வி. இணைப்புக்கான செட்டாப் பாக்ஸ் வழங்குவதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் உடனே புகார் தெரிவிக்க வேண்டும் என்று மக்களுக்கு, மாவட்ட கேபிள் டி.வி. பிரிவு அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
கேபிள் டி.வி. இணைப்புகளுக்கு கேபிள் டி.வி. கார்ப்பரேசன் மூலம் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு. மேலும், இதற்காக இணைப்புக் கட்டணமாக ரூ.200 மட்டும் வசூலிக்க வேண்டும் என்றம் ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஒவ்வொரு இடங்களிலும் மாறுபட்ட கட்டணங்களை வசூலித்து வருகின்றனர்.
விருதுநகர் பகுதியில் ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றும் இதுகுறித்து கேபிள் டி.வி.ஆபரேட்டர்களிடம் மக்கள் விவரம் கேட்டால் முறையான விளக்கம் சொல்லப்படுவதும் இல்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபற்றி மாவட்ட கேபிள் டி.வி. பிரிவு அதிகாரி கூறியது: "மாவட்டத்தில் 2¼ இலட்சம் பதிவு பெற்ற கேபிள் டி.வி. இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு அரசின் செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.
செட்டாப் பாக்ஸ் வழங்குவதில் சில நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டி இருப்பதால் செட்டாப் பாக்ஸ் இணைப்பு வழங்க காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு வழங்கும் செட்டாப் பாக்ஸ் இணைப்புக்கு ரூ.200 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.
இது தவிர தனியார் செட்டாப் பாக்ஸ்களை கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. பதிவு பெற்ற இணைப்புகளை தவிர கூடுதல் இணைப்புகளும் இருக்க வாய்ப்பு உள்ளது.
அரசு அறிவித்த கட்டணத்திற்கு கூடுதலாக வசூலித்தால் அது தொடர்பாக மக்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சில பகுதிகளில் கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் செட்டாப் பாக்சுக்கான கட்டணம் ரூ.200 உடன் ஒரு மாதகட்டண தொகையையும் முன்பணமாக வசூலிக்கும் நிலை உள்ளது. இதில் ஏதும் முறைகேடுகள் நடந்தால் மக்கள் புகார் அளிக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.
