எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழியென்ன இந்தியக் கரன்சியா?: கவிஞர் வைரமுத்து கேள்வி
எல்லா மாநிலத்திலும் இந்தி மொழி என்ன ரூபாய் நோட்டா என்றும் இந்தி பேசாதவர்கள் இந்தியர் இல்லை என்று ஆகிவிடுமா என்றும் வைரமுத்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மத்திய பாதுகாப்புப் படை வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் இந்தி கற்றக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்திப் பேசியதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், மத்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இந்தி தெரியுமா என்று கேட்டு அத்துமீறிப் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்தப் பெண் பாதுகாப்புப் படை வீரர் தன்னை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சி நடப்பதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
குழந்தையைத் தத்தெடுப்பது ஈசிதான்! மத்திய அரசின் பிரத்யேக இணையதளம் அறிமுகம்
இந்நிலையில் திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவும் பாதுகாப்புப் படை வீரரின் அத்துமீறிய பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், எல்லா மாநிலத்திலும் இந்தி மொழி என்ன ரூபாய் நோட்டா என்றும் இந்தி பேசாதவர்கள் இந்தியர் இல்லை என்று ஆகிவிடுமா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தனது ட்விட்டர் பதிவில் வைரமுத்து கூறியிருப்பதாவது:
இந்தி பேசாதவர்
இந்தியர் இல்லை என்று
அரசமைப்பில் இருக்கிறதா?
இந்தியா என்ற நாடு
இந்தி என்ற
சொல்லடியில்தான் பிறந்ததா?
எல்லா மாநிலங்களிலும்
புழங்குவதற்கு
இந்தி மொழியென்ன
இந்தியக் கரன்சியா?
இந்தி பேசும் மாநிலங்களிலேயே
இந்தி கல்லாதார் எண்ணிக்கை
எவ்வளவு தெரியுமா?
வடநாட்டுச் சகோதரர்கள்
தமிழ்நாட்டுக்குள் வந்தால்
தமிழ் தெரியுமா என்று
தெள்ளு தமிழ் மக்கள்
எள்ளியதுண்டா?
சிறுநாடுகளும்கூட
ஒன்றுக்கு மேற்பட்ட
ஆட்சிமொழிகளால்
இயங்கும்போது
இந்தியாவை
ஓர் ஒற்றை மொழிமட்டும்
கட்டியாள முடியுமா?
22 பட்டியல் மொழிகளும்
ஆட்சிமொழி ஆவதுதான்
வினாத் தொடுத்த காவலர்க்கும்
விடைசொன்ன
தமிழச்சிக்குமான ஒரே தீர்வு
இவ்வாறு வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
வீரதீரச் செயல்கள் புரிந்த தமிழக ரயில்வே ஊழியர்களுக்கு தேசிய விருது!