Introduction of Farmer cellphone app to find more information about agriculture - Collector released ...

காஞ்சீபுரம்

வேளாண்மை சம்பந்தமான பல்வேறு தகவல்களை விவசாயிகள் அறிய "உழவன் கைப்பேசி செயலி" என்ற கையேட்டினை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சீபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டார்.

காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காஞ்சீபுரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. 

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமை தாங்கி, “உழவன் கைப்பேசி செயலி” என்ற கையேட்டினை வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது பெற்றுக் கொண்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 

பின்னர் அவர் பேசியது: "விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்வது மட்டுமின்றி, விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம் அடைய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை எடுத்துக் கூறும் வகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.

தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட “உழவன் கைப்பேசி செயலி” மூலம் வேளாண்மை சம்பந்தமான பல்வேறு தகவல்களை விவசாயிகள் அறிய முடியும். 

இந்த கைப்பேசி செயலியை கொண்டு அரசின் வேளாண் மானியத்திட்டங்களின் விவரம், பயிர் காப்பீடு, உரம் இருப்பு, விதை இருப்பு, வேளாண் எந்திரங்களின் வாடகை மையங்கள், விளை பொருட்களின் சந்தை விலை, வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை போன்ற விவரங்களை அறிந்துகொள்ள முடியும்" என்று அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளிடம் இருந்து மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவைத்தொகை வழங்க கோருதல், சொட்டு நீர்பாசன கருவி வழங்குதல், கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்குதல், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை வட்டாரம் வாரியாக நடத்த கோருதல், அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 120 மனுக்கள் பெறப்பட்டன. 

அதில் 53 மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 67 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லதா பானுமதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்தையா, மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் சந்திரசேகர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.