"ரெண்டு வருஷத்துல என் காதல் வாழ்க்கைய முடிச்சுட்டீங்களே..." காவல் ஆய்வாளரால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் ராஜா வேதனையின் உச்சத்தில் கூறியுள்ள வார்த்தைகள் இது

தஞ்சாவூர் மாவட்டம், சூளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உஷா, 3 மாத கர்ப்பிணியான மனைவியுடன், திருச்சியில் நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்றார்.

அப்போது, திருச்சி துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை மறித்த்துள்ளனர். வ்கனம் சோதனை சாவடியில் நிற்காமல் சென்றதை அடுத்து, இரு சக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்று எட்டி உதைத்திருக்கிறார்.

இதில் நிலை தடுமாறிய உஷா மற்றும் அவரது கணவர் ராஜா இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த உஷா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜா, உஷாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். உஷாவுக்கு ஏற்கனவே கருவுற்றிருந்தபோது, கரு கலைந்துள்ளது. மீண்டும் சில மாதங்களுக்குப் பிறகு, உஷா கர்பம் தரித்துள்ளார். இதனால், ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.

இந்த நிலையில்தான், மனைவியை அழைத்துக் கொண்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். மனைவியை இழந்து தனி மரமாக இருக்கும் ராஜா, ரெண்டு வருஷத்துல என் காதல் வாழ்க்கையை முடிச்சுட்டீங்களே என்று கதறுகிறார்.

இனி எந்தவொரு பெண்ணுக்கும் இதுபோல் நடக்கக் கூடாது என்ற ராஜா, மனைவியின் சாவுக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அது வரை உடலை வாங்க் மாட்டோம் என்றும் ராஜா திட்டவட்டமாக கூறி வருகிறார்.