தருமபுரி

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தண்ணீர் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தருமபுரி மாவட்டம், மழையின்மை மற்றும் கடுமையான வறட்சி, கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறந்து விட மறுப்பு போன்ற காரணங்களால் எப்பவும் இல்லாத அளவுக்கு ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி வறண்டு எங்கு பார்த்தாலும் பாறைகளாக காட்சியளித்தது.

மேலும், பிரதான நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் இல்லாததால் யாரும் அருவிகளில் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், பயணிகள் வருகையும் இல்லை.

ஆனால், இந்த நிலை சில தினங்களுக்கு முன்பு வரைதான். கடந்த சில தினங்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 10 நாள்களாக அருவிக்கு ஓரளவு தண்ணீர் வரத் தொடங்கியது.

இந்த தண்ணீர் படிப்படியாக அதிகரித்து, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு ஒகேனக்கல் அருவிக்கு 350 கன அடி வந்தது. இது அன்றைய தினம் மாலையில் மேலும், சற்று கூடுதலாக நொடிக்கு 850 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்றும் ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தே காணப்பட்டது, இப்போது, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது, மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் என அனைவரும் தொழில் பெருகியதை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.