Increase in deaths due to dengue fever in Chennai
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு பாதிப்பு காரணமாக வட சென்னையில் இன்றும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். டெங்குவைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், டெங்குவின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்குவை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், வீடு, கடை மற்றும் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கும்படி வாகன டயர்கள், பழைய பொருக்ளை வீசக் கூடாது என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகளவில் இருந்து வந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசை தொடரந்து வலியுறுத்தி வருகிறது.
சென்னை, புதுப்போட்டை போன்ற பகுதிகளில் பழைய பொருட்கள், கழிவுகள் சேர்த்து வைக்கப்படுவதால், அதில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாவதை தடுக்க சுகாதார துறையும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. கடை மற்றும் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு நோட்டீஸ் விநியோககிக்கப்பட்டு வருகிறது.
அப்படி நோட்டீஸ் கொடுத்தும், கடைகள், வீடுகளில் இருந்து பழைய பொருட்களை அகற்றாதவர்கள் மீது நடவடிக்கையும் சென்னை மாநகராட்சியால் எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் தொகை விதிக்கப்படுகிறது. இதனால் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மட்டுமல்லாமல் உயிரிழப்புகளும் அதிகரித்தே வருகின்றன.
வட சென்னை, வியாசர்பாடி பகுதியில் டெங்குவால் இன்று ஒரு சிறுவன் உயிரிழந்தார். டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
