கடந்த 7ம் தேதி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியது. குறிப்பாக ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக ரூ.85 கோடி பதுக்கி வைத்தது தெரிந்தது. இதனால், ஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மேலும், வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த ஆவணங்கள் குறித்து விசாரணைக்கு வரும்படி அமைச்சர் விஜயபாஸ்கர், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், சரத்குமார் உள்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதைதொடர்ந்து, நடிகர் சரத்குமாரின் மனைவி ராதிகாவின் அலுவலகமான ராடன் மீடியா நிறுவனத்தில் நேற்று, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து ஏராமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.