திருச்சி
 
திருச்சியில் ரமலான் பண்டிகையை கொண்டாட முக்கொம்புக்கு சுற்றுலா சென்ற 13 வயது சிறுவன் உள்பட இருவர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டது. 

திருச்சி மாவட்டம், தென்னூர் ஒத்தமினார் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ரகமத்துல்லா. இவருடைய மகன் தௌபிக் (13). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 

ரகமத்துல்லாவின் உறவினர் ஜமாலுதீன். இவருடைய மகன் ஷேக்அப்துல்லா (24). இவர் சி.ஏ. படித்து முடித்துவிட்டு சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தார். தற்போது அவர் திருச்சி வீட்டில் தங்கியிருந்தார். 

நேற்று முன்தினம் ரமலான் பண்டிகையை கொண்டாடிவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தௌபிக் மற்றும் ஷேக்அப்துல்லா ஆகியோர் குடும்பத்துடன் முக்கொம்புக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். 

முக்கொம்பை சுற்றி பார்த்துவிட்டு மேலணைக்கு அருகில் காவிரி ஆற்றில் தேங்கி கிடந்த தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய குடும்பத்தினர் கரையில் அமர்ந்திருந்தனர். 

அப்போது தௌபிக் மற்றும் ஷேக்அப்துல்லா இருவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது, திடீரென தண்ணீரில் மூழ்கினர். இதனைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து அலறினர். 

சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் குதித்து இருவரையும் தேடி பார்த்தனர். பின்னர், இருவரையும் மீட்டு அவசர ஊர்தி மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை சோதித்த மருத்துவர், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.