சல்லிக்கட்டுக்குத் தடை விதித்ததைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம், பில்லமநாயக்கன்பட்டியில் காளைகளின் கொம்புகளில் கருப்புக்கொடி கட்டியும், தங்களது கண்களில் கருப்புத்துணி கட்டியும் கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்த தடையை நீக்கக்கோரியும், இந்தாண்டு சல்லிக்கட்டை நடத்தியே தீரவேண்டும் என்றும் மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், பல கிராமங்களில் கடையடைப்பு போராட்டமும் நடந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். இங்கு நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காகவே சுற்றுவட்டார பகுதிகளில் காளைகளை வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் இல்லையேல் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று காளைகளின் கொம்புகளில் கருப்புக் கொடி கட்டியும், தங்களின் கண்களில் கருப்புத்துணி கட்டியும் கிராமத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.