In tamilnadu courses yoga and road rules should be added

தமிழக அரசு பாடத்திட்டத்தில் யோகா மற்றும் சாலை விதிகள் விரைவில் சேர்க்கப்படும் எனவும், 1.3 கோடி மாணவர்களுக்கு பாடநூல் உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறிய பள்ளிக்கல்வித்துறை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது.

அதன்படி மே மாத விடுமுறை காலம் முடிந்து இன்று தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விருகம்பாக்கத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு பாடப்புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பாடபுத்தகங்களை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், சீருடை உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1.3 கோடி மாணவர்களுக்கு பாடநூல் உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தமிழக அரசு பாடத்திட்டத்தில் யோகா மற்றும் சாலை விதிகள் விரைவில் சேர்க்கப்படும்

தனியாருக்கு இணையாக தமிழக பள்ளிக்கல்வித்துறை திகழ்ந்து கொண்டிருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை குறித்த 40 அறிவிப்புகள் மானிய கோரிக்கை போது அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டுவரக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.