தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் அனுமதியையும், பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தத்தையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். பள்ளிகளில் இலவச wi – fi , அடுத்த ஆண்டு முதல் கண்ணைக் கவரும் வண்ண சீருடை, கம்யூட்டர் கல்வி என பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்க ஒப்பந்திம் செய்யப்பட்டுள்ளது.. மேலும் தமிழகத்தில் 7 அரசுப் பள்ளிகளையும் அந்நிறுவனம் தத்தெடுக்கிறது.

 இதுகுறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது.

மேலும், கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியையும் மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரி பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் பெற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகஅரசு பல்வேறு மாற்றங்களை பள்ளி கல்வித்துறை சார்பில் செய்து வருவதாகவும்,500 அரசு ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் ஈ புக் மூலம் பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.