உச்சநீதிமன்றம் எனக்கு முதலாளியுமல்ல, நான் அவர்களுக்கு சேவகனுமல்ல. என்னுடைய அதிகாரத்தில் அவர்கள் தலையிட்டதால் தான் நான் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன் என்று நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த கர்ணனுக்கு  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இவர், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தது. 

நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்குள்ளாகிய நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தம்மை உச்ச நீதிமன்றம் துன்புறுத்தியதாக வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு தொடுத்து அதை கர்ணனே விசாரித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் நீதிபதி என்பதால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தது. 

இதனையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது; உச்சநீதிமன்றம் எனக்கு முதலாளியுமல்ல, நான் அவர்களுக்கு சேவகனுமல்ல. என்னுடைய அதிகாரத்தில் அவர்கள் தலையிட்டதால் தான் நான் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன்.

மேலும்,  நான் போட்ட உத்தரவு சட்டத்தின் அடிப்படையில் போடப்பட்டது. சட்டப்பூர்வமில்லாத செயல்களில் உச்சநீதிமன்றம் ஈடுபடுகிறது. பதவியில் உள்ள நீதிபதியை கைது செய்ய முடியாது. இது ஆத்திரத்தில் போடப்பட்ட உத்தரவு என்றார்.