சிவகங்கை

சிவகங்கை நகராட்சியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு நகராட்சியின் சார்பில் கூடுதல் வரி வசூலிக்கப்படுவதற்கு மாவட்டக் காங்கிரசு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரசு கட்சியின் சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர் கே.சண்முகராஜன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சிவகங்கை நகராட்சிக்கு உள்பட்ட 27 வார்டுகளிலும் உள்ள வீடுகள், கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு நகராட்சியின் சார்பில் கூடுதல் வரி விதிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.

ஏற்கெனவே, கட்டப்பட்டுள்ள வீடுகளில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கும் சதுர அடி கணக்கில் வரி விதிக்கப்படும் என, நகராட்சி அலுவலர்கள் மக்களை அச்சுறுத்துகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மிகவும் பழமையான நகரம். 40 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட வீடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு என்பது ஏற்க முடியாது.

இதனை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டுச் செல்வதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லை என்பதால், நகராட்சி நிர்வாகம் மக்கள் மீது வரிச் சுமையை திணிக்க முற்படுகிறது.

மக்கள் நலன் கருதி சட்டத்திற்குப் புறம்பாக நிர்ணயிக்கப்படும் வரி விதிப்பை, சிவகங்கை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்” என்று அதில் கூறியிருந்தார்.