திருநெல்வேலி

திருநெல்வேலியில் குடிநீருக்கு பதிலாக சாக்கடைத் தண்ணீர் போன்று மணல் மற்றும் அசுத்தங்கள் நிறைந்து கலங்கலான தண்ணீராக வீட்டுக் குடிநீர் குழாயில் வந்ததால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. பருவ மழை பொய்த்து விட்டதால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி, அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

நெல்லை மாவட்டம் தென்காசியில் குடிநீர் பிரச்சனை எப்பவும் அதிகமாக இருந்ததில்லை. நகரசபையின் ஒரு சில வார்டுகளில் மட்டும் குடிநீர் தட்டுப்பாடு இருந்தது.

ஆனால், தற்போது நகரின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் சில வாரங்களில் குறைவான அளவே தண்ணீர் கிடைக்கிறது. பலர் குடிநீரை விலைக்கு வாங்குகிறார்கள்.

இதுபோதாது என்று அணைக்கரை தெரு பகுதியில் மணல் மற்றும் அசுத்தங்கள் நிறைந்து கலங்கலான தண்ணீராக வீட்டுக் குடிநீர் குழாயில் விநியோகம் செய்யப்படுகிறது. அது பார்ப்பதற்கு “சாக்கடைத் தண்ணீர்” போலவே இருக்கிறது. இதனால், மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து மக்கள், வணிகர்கள் தெரிவித்தது:

“தென்காசியை ஒட்டி ஏழைகளின் ஊட்டியான குற்றாலம் இருந்தும் சீசன் நேரங்களில் அந்த தண்ணீரை முறையாக சேமித்து வைக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே தென்காசி நகரின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நகரசபை பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க வேண்டும். அதுவும் சரியான இடத்தை தேர்வு செய்து அமைத்து குடிநீரை சேமித்து வைக்க வேண்டும்.

பழுதாகி கிடக்கும் குடிநீர் குழாய்களை ஆய்வு செய்து அதனை சீரமைக்க வேண்டும். சேமித்து வைக்கப்பட்ட நீரை அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் திட்டமிட்டு முறையாக விநியோகம் செய்ய வேண்டும்.

நகர்ப்பகுதியில் பழுதாகி கிடக்கும் அடிபம்புகளையும் சரி செய்து தரவேண்டும் என்று நகரசபை நிர்வாகத்துக்கு மக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.