Asianet News TamilAsianet News Tamil

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை...

if private schools collect Higher payment will take action collector warning
if private schools collect Higher payment will take action collector warning
Author
First Published May 10, 2018, 9:16 AM IST


சேலம்
 
தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என்றும் மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் 2074 தனியார் பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் எந்த நிலையில் உள்ளது? என்பது குறித்து ஆண்டுதோறும் கோடை விடுமுறையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டுக்கான பள்ளி வாகனங்கள் ஆய்வு நேற்று சேலம் ஜவகர் மில் திடலில் தொடங்கியது. முதல் நாளான நேற்று சேலம் மாநகரில் 110 பள்ளிகளில் இருந்து 405 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 

இந்த ஆய்வு பணியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் ஏறி மாணவ, மாணவிகள் அமரும் இருக்கையை பார்வையிட்டதுடன், அவசர வழி கதவு செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின்போது குறைகள் ஏதும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதனை இந்த மாத இறுதிக்குள் சரிசெய்து வாகனத்தை மீண்டும் அதிகாரிகளிடம் காண்பித்து சான்றிதழ் பெற வேண்டும். 

இந்த ஆய்வில் தீயணைப்பு வீரர்கள், ஓடும் பேருந்தில் தீ பிடித்தால் அதை தீயணைப்பான் கருவி மூலம் எப்படி அணைப்பது? என்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகௌரி, காவல் துணை ஆணையர் தங்கதுரை, உதவி ஆட்சியர் குமரேஸ்வரன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தாமோதரன்(மேற்கு), பாஸ்கரன்(தெற்கு), கதிரவன்(கிழக்கு) உள்பட பலர் பங்கேற்றனர்.

அதன்பின்னர் ஆட்சியர் ரோகிணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், "சேலம் மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டில் இதுவரை விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளன. இன்று (அதாவது நேற்று) 500 பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யும் பணி தொடங்கியது.

ஆய்வின்போது ஏதேனும் குறைகள் இருப்பின் அதை இந்த மாத இறுதிக்குள் சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு வாகனமும் தரவாக சோதனை செய்யப்படும். 

ஷேர் ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை கூடுதலாக ஏற்றி வருவதாக புகார் வந்துள்ளது. இதனால் ஆட்டோக்களை சோதனையிட்டு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும். இதை மீறி அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios