I will release name of those who have plotted against me says Former TN chief secretary Rama Mohana Rao
குட்கா உயிருக்கு மட்டுமல்ல அதிகாரத்துக்கும் கேடு’தான் போல. கடந்த வருடம் ஆகஸ்டு மாதத்தில் வருமான வரித்துறையின் முதன்மை இயக்குநரான பாலகிருஷ்ணன், அப்போது தமிழக தலைமை செயலராக இருந்த ராமமோகன் ராவை சந்தித்து ஒரு ஃபைலை கொடுத்தார். அதில் தமிழகத்தில் குட்கா விற்க சட்டப்புறம்பாக அனுமதி வழங்கி, அதில் லஞ்சப்பணம் அள்ளிக் கட்டிய ஐ.பி.எஸ். அதிகாரிகள், தமிழக அமைச்சர் உள்ளிட்ட முக்கிய நபர்களின் பெயர்கள் மற்றும் விபரங்கள் இருந்ததாக ஒரு தகவல்.
இதை ராவ், ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு போய்விட்டாலும் கூட ஜெ.,வின் உடல் நிலை டல்லாக இருந்ததால் பெரிய அதிரடிகள் தொடரவில்லை. அதன் பின் ஜெ.,வின் கதி என்னானது என்பது உலகறிந்த விஷயம்.
இந்நிலையில் ராவ்வும் சில மாதங்களுக்கு முன் ரெய்டில் சிக்கி பின் அபத்தமான சூழலோடு ரிட்டயர்டானார்.
இந்நிலையில் குட்கா விவகாரம் இன்று வரையில் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது இதுபற்றி வாய் திறந்திருக்கும் ராம மோகன் ராவ் “பாலகிருஷ்ணன் என்கிட்ட கொடுத்த பைலை நான் உடனே முதல்வரோட டேபிளுக்கு கொடுத்துட்டேன்.
அந்த அறிக்கையில் அமைச்சர், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகியோர் கள்ளத்தனமான குட்கா அனுமதிக்காக லஞ்சம் பெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்டஹ் ஐ.பி.எஸ். அதிகாரிகள் யார்? என விசாரித்தபோது சென்னை கமிஷ்னர்களாக இருந்த ஜார்ஜ் மற்றும் டி.கே.ராஜேந்திரன் என தெரியவந்தது. இவர்களுக்கு ராஜேந்திரன் எனும் புரோக்கர்தான் பணத்தை விநியோகம் செய்ததாக அறிந்தேன். அப்போது டி.கே.ராஜேந்திரன் சென்னை போலீஸ் கமிஷ்னராக இருந்ததால் முதல்வர் ஜெயலலிதா விசாரணை நடத்தினார். “இதில் நான் சம்பந்தப்படவில்லை. இது குறித்தி தீவிரமாக விசாரிக்க உத்தரவிடுங்கள்.” என கமிஷ்னர் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் என் அறையிலிருந்த ஐ.டி. துறையின் அறிக்கை தொலைந்து போனது. எனது மேசைக்கு அருகே டிராயரில்தான் வைத்திருந்தேன். சரி அதை நான் மறைத்து வைத்துவிட்டேன் என்றே வைத்துக்கொள்வோம். இதே போன்ற அறிக்கை அப்போது டி.ஜி.பி.யாக இருந்த அசோக்குமாரிடம் கொடுக்கப்பட்டதே! அது எங்கே? அவரும், அது தொடர்பாகாருணாச்சலம் எனும் ஐ.ஜி.யை வைத்து ரகசிய விசாரணை நடத்தினாரே? முதல்வருக்கு தபால் மூலமாக அறிக்கை அனுப்பினாரே! அது எங்கே? அதுவும் திருட்டு போனதா? ஆக இதில் நிறைய சூழ்ச்சிகள் இருக்கிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் எனக்கு நல்ல மரியாதையான இடம் இருந்தது. நல்ல முறையில் ஓய்வு பெற வேண்டிய என்னை ஒழித்துக் கட்ட சதித்திட்டம் தீட்டியவர்கள் யார்? அதன் பின்னனி என்ன? என்பதெல்லாம் எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதை ஒரு நாள் ஊரறிய சொல்வேன். அப்படி சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை, இன்னும் சில நாட்களே உள்ளன.” என்று பட்டாசு டிரெயிலர் ஓட்டியிருக்கிறார்.
தமிழகத்தில் இருக்கின்ற ‘பிரேக்கிங்! பிக் பிரேக்கிங்’ பத்தாது என்று இந்த மாஜி தலைமை செயலர் வேறு தனி ரூட் போடுகிறார்.
தாங்குமா தமிழகம்?
