செங்கல்பட்டு அடுத்த சாலவாக்கம் புல்லம்பாக்கத்தை சேர்ந்தவர் முரளி (36). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். 10க்கு மேற்பட்ட சிறிய பொக்லைன் இயந்திரங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுவந்தார். இவரது மனைவி வனஜா (28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த கடந்த 19ம் தேதி வேலைக்கு சென்ற முரளி இரவு வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் காலையில், அவர் விபத்தில் இறந்துவிட்டதாக வனஜாவுக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து பாலூர் போலீசார் முரளி இறந்ததை விபத்து வழக்காக பதிவு செய்தனர். மேலும் அவரது உடல் தகனமும் செய்யப்பட்டுவிட்டது.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக முரளி வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு வாலிபர்,அடிக்கடி வந்து செல்வார். இதை பார்த்த அப்பகுதி மக்களிடம் சலசலப்பு ஏற்பட்டு, பரபரப்பாக பேசி வந்தனர்.

இந்நிலையில், வனஜாவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை வந்த வாலிபர், மாலை வரை வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அந்த வீட்டை பூட்டி வைத்து, அவர்களை சிறை வைத்தனர்.

தகவலறிந்து பாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வனஜா மற்றும் அவருடன் இருந்த வாலிபரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது, அப்பகுதி மக்கள், முரளியின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், விசாரித்தபோது, அதில் வனஜாவுடன் இருந்த வாலிபர், ஸ்ரீபெரும்புதூர் அருகே மேட்டு பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (28) என்றும், முரளியிடம் பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து தொழில் செய்வதும் தெரிந்தது. மேலும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

அதில், முரளியிடம் பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு கொடுக்கும் போது, இருவரும் நண்பர்கள் ஆனார்கள். இதையொட்டி, முரளி வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரமேஷ் கலந்து கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் முரளி சொந்தமாக வீடு கட்டி கிரக பிரவேசம் செய்தார். அப்போது, வனஜாவுடன் ரமேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர், அவர்களுக்குள் கள்ளத் தொடர்பாக மாறியது.

இதையடுத்து, இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். பின்னர், நண்பன் முரளி இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து வனஜாவுடன் நெருக்கமாக இருந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் முரளி வீட்டில் இருந்தபோது, வனஜா கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்தார். அப்போது, பொருட்கள் இருந்த பையை வனஜா கீழே வைத்தபோது, மறைத்து வைத்திருந்த ஆன்ட்ராய்டு செல்போனும் கீழே விழுந்தது. 

இதை பார்த்த முரளி, ‘இந்த போன் யாருடையது, எப்போது வாங்கினாய்?’ என்று கேட்டார். ஆனால், வனஜா எந்த பதிலும் கூறவில்லை. அந்த போனை ஆராய்ந்தபோது அதில் ரமேசின் செல்போன் எண் மட்டுமே இருந்தது. அதில் வீடியோ, வாட்ஸ் அப் மெசேஜ், போட்டோ இருந்தது. இதனால் முரளி, மனைவி வனஜாவை கண்டித்தார்.

பின்னர், வழக்கம்போல முரளி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது, ரமேஷிடம் செல்போனில் பேசிய வனஜா, நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். அதற்கு ரமேஷ், முரளியை கொலை செய்ய முடிவு செய்தார்.

இந்நிலையில், முரளியை கொல்லும் நோக்கில், ரமேஷ் தனது நண்பர்களுடன் கடந்த 19ம் தேதி ஒரகடம் பகுதிக்கு சென்றார். அங்கு வேலையில் இருந்து பைக்கில் வந்த, முரளியை வழிமறித்து, அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று, இரும்பு ராடு மற்றும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து கொலை செய்தார்.

பின்னர், அங்கிருந்து சடலத்தை சாலையில் வீசிவிட்டு, அவர் ஓட்டி வந்த பைக்கையும், விபத்தில் ஏற்பட்டதை போல் உடைத்தனர். இதுபற்றி வனஜாவுக்கு தகவல் கொடுத்து விட்டனர். வனஜாவும், தனக்கு எதுவும் தெரியாதது போல கதறி அழுது அனைவரையும் நம்ப வைத்தார். முரளி வாகன விபத்தில் இறந்தார் எனவும் போலீசில் புகார் செய்தார் என வனஜா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.

இதையடுத்து போலீசார், கொலை வழக்காக பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும், முரளியை செய்வதற்கு உடந்தையாக இருந்த மற்ற சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.