திருவள்ளூர்

திருவள்ளூரில் பெற்ற மகனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றுவிட்டதாக மனைவி மீது கணவன் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (26). இவர் தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஜமுனாராணி (22). இவர்களுக்கு யாஷினி (4) என்ற மகளும், சபரீஷ் (3) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த விஜய் என்பருடன் ஜமுனாராணிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

விஜய்க்கும் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனால், ஜமுனாராணி ஒரு வருடத்திற்கு முன்பு கணவனை பிரிந்து விஜயுடன் புழல் ஒத்தவாடை தெருவில் வசித்து வந்தார். அப்போது தனது மகன் சபரீசையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் இரவு குழந்தை சபரீஷ் மாடி படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக ஜமுனாராணி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.

இதனிடையே நேற்று பகல் கோபிநாத் தனது மகன் சபரீஷை ஜமுனாராணி மற்றும் விஜய் ஆகியோர் அடித்துக்கொன்று விட்டனர் என்று புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.