வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
காவல் துறை உள்ளிட்ட காவல் படைகளில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வெள்ளிக்கிழமை கடலூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை உயிரிழந்தவர்களுக்கான வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
மாவட்ட எஸ்பி செ.விஜயக்குமார் பங்கேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான அணியினர் 22 துப்பாக்கிகளைக் கொண்டு 3 முறை குண்டுகளை வெடிக்கச் செய்து வீரவணக்கம் செலுத்தினர். வீரமரணம் அடைந்தவர்களின் பெயர்களை எஸ்பி வாசித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் க.திருமலைச்சாமி, கே.ராமசாமி, வேதரத்தினம், துணைக் கண்காணிப்பாளர்கள் கணேசன், க.நரசிம்மன் மற்றும் ஊர்க்காவல் படை மண்டல தளபதி, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்படை அதிகாரிகள் பங்கேற்றனர்.
