முஸ்லிம்களில் தலாக் (விவாகரத்து) சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். 

பதர் சயீத் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் திருமணமான ஆண்கள் 3 முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது. மாவட்ட காஜியார்கள் தலாக் சான்று வழங்கி வி்ட்டால் அதுவே இறுதி முடிவு என எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இது முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது மட்டுமின்றி தன்னிச்சையானது. எந்த சூழலில் தலாக் சொல்லப்படுகிறது. எதற்காக சொல்லப்படுகிறது என்ற காரணத்தை காஜியார்கள் கருத்தில் கொள்வதில்லை. ஆரம்பத்தில் உரிமையியல் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்ட பிறகு காஜியார்களின் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

 மற்ற மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு விவாகரத்து விசயத்தில் சட்ட ரீதியிலான பாதுகாப்பு உள்ளது. ஆனால் அந்த சட்டப் பாதுகாப்பு முஸ்லிம் பெண்களுக்கு இல்லை.

 ஆகவே தலாக் சொல்லி விவாகரத்து பெறும் முறையை ரத்து செய்தும், காஜியார்கள் தலாக் சான்றிதழ் வழங்குவதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.


 இந்த மனு இன்று  தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘ ஹாஜியார்கள் சட்டம் 1880 பிரிவு 4-ல் காஜிக்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி நீதிபரிபாலனம் செய்யும் உரிமை அவர்களுக்கு இல்லை. 

தலாக் விசயத்தில் காஜியார்கள் தரக்கூடிய சான்றிதழ் என்பது எந்த விதத்திலும் சட்டரீதியான ஆவணம் கிடையாது. அந்த சான்று காஜியார்களின் தனிப்பட்ட கருத்து. அவ்வளவு தான். எனவே இந்த வழக்கு முடியும் வரை தமிழகம் முழுவதும் உள்ள காஜியார்கள், தலாக் சான்று வழங்கக்கூடாது என நாங்கள் தடை விதிக்கிறோம்.

அதுபோல, ஹாஜியார்கள் தரக்கூடிய தலாக் சான்றிதழை ஒரு சட்ட ரீதியிலான விவாகரத்து ஆவணமாக நீதிமன்றங்கள்  எடுத்துக் கொள்ளக்கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம்.

இந்த வழக்கில் தலாக்  நடைமுறைகளை புதிய வடிவில் மாற்றுவது குறித்து பதிலளிக்க எதிர்மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணையை பிப்ரவரி 21-ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்’’ என குறிப்பிட்டுள்ளனர்