high court said Natural disasters can not criticize the state

இயற்கை சீற்றங்களுக்கு அரசை குறை கூற முடியாது எனவும் ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க, இந்திய கடற்படையும், கடலோர காவல்படையும் தீவிர தேடுதல் வேட்டை நடத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். மீட்பு பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நட‌வடிக்கை அரசு எடுக்கவில்லை எனவும் பல இடங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவில்லை எனவும் தமிழக அரசு மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த மனுவில் அரசு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இயற்கை சீற்றங்களுக்கு அரசை குறை கூற முடியாது எனவும் ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க, இந்திய கடற்படையும், கடலோர காவல்படையும் தீவிர தேடுதல் வேட்டை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

மேலும் மத்திய, மாநில அரசுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு பணியை துரிதப்படுத்த வேண்டும் எனவும் மீனவர்களுக்கு மட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

ஒகி புயலால் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு எவ்வளவு நிவாரணத்தொகை என்பதை நீதிமன்றங்களால் நிர்ணயிக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.