Heavy rain krishnagiri

கிருஷ்ணகிரியில் ஒருமணி நேரத்திற்கு மேலாக வீசிய பலத்த மழையால் பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் ஆறாக ஓடியது.

வழக்கமாக தென் மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால், கடந்த 2011ம் ஆண்டுக்குப் பின் பருவ மழை பொய்த்து, சுமாரான மழையாகவே இருந்தது. இதனால், தென் மேற்கு பருவ மழையை நம்பி இருந்த விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு 2 நாட்கள் முன்கூட்டியே பருவமழை பெய்து அனைத்து தரப்பு மக்களையும் குளிர்வித்து வருகிறது.

இதனிடையே வெப்ப சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சேலம், ஈரோடு, தருமபுரி, நீலகிரியில் மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேகமூட்டத்துடன் இருந்த கிருஷ்ணகிரியில் தற்போது பலத்த மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது.

இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.